திங்கள், டிசம்பர் 05, 2011

.


ஏகஇறைவனின் திருப்பெயரால்....

وَلَقَدْ أَخَذْنَا آلَ فِرْعَونَ بِالسِّنِينَ وَنَقْصٍ مِّن الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ

7:130. ''படிப்பினை பெறுவதற்காகப் பல வகைப் பஞ்சங்களாலும் பலன்களைக் குறைப்பதன் மூலமும் ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தைத் தண்டித்தோம்.



நிலையில்லா செல்வமும், நிரந்தரமில்லா உலகமும்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கடந்த காலங்களில் அமெரிக்காவில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார   நெருக்கடிக்குப் பின் தொடர்ந்து ஜெர்மனி, அதையடுத்து, ஐரோப்பாவின் ஸ்பெயின் இன்னும் பல நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது


எந்தளவுக்கென்றால் இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைப்போல் இப்பொழுது ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேற்கானும் பொருளாதார வீழ்ச்சிக்குப் பின் உலக நாடுகளில் எண்ணிலடங்கா தொழில் நிருவனங்கள் இழுத்துப் பூட்டப்பட்டு அதனால் ஏராளமான மக்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.

பொருளாதாரத்தில் பின்னடைவை அடைந்திருக்கும் மேல்படி நாடுகள் மழையை நம்பி வாழும் விவசாய நாடுகள் அல்ல !

புருவத்தை உயர்த்திப் பார்க்கும் அளவுக்கு நவீன தொழில் உபகரணங்களைத் தயாரித்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும், மருத்துவம், விஞ்ஞானம் போன்ற தொழில் நுட்ப கல்வியில் முன்னேறிய நாடுகளாகும்.

பெரும் பெரும் தொழில் நிருவனங்களை நிறுவி அதன் மூலமாக உலகின் பெரும் பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்து அண்ணிய செலாவணியை குவித்து தங்கள் நாட்டில் செல்வ நிலையை அதிகப்படுத்திக் கொண்டதுடன் வலிமை மிக்க ராணுவத்தை உருவாக்கி அதன் மூலம் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினர்.

தானிய மணிகளை உழுதுப் பயிரிட்டு அறுவடை செய்யும் நிலங்களில் கண் கவர் பூச் செடிகளை உருவாக்கி பூங்காவனம் அமைத்து அவற்றிற்கு மத்தியில் செயற்கை நதிகளை ஏற்படுத்தி சொர்க்க பூமியாக ஆக்கிக் கொண்டவர்கள்.

செல்வச் செழிப்பால் இறைவனை மறந்தார்கள் அனுபவி ராஜா அனுபவி என்று விழுந்து விழுந்து அனுபவித்தார்கள்.

அவர்களுடைய நாடுகளின் தொழிற்சாலைகளில் உருவாக்கிய பொருட்களை வெளிநாடுகளின் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொழுது கூடவே அவர்கள் இறைவனை மறந்து அனுபவித்த  உல்லாச வாழ்க்கையையும் ஏற்றுமதி செய்து அனுப்பினார்கள்.

  • இது தான் உலகம் !
  • இது தான் வாழ்க்கை !
  • இதற்கு மேல் ஒரு வாழ்க்கை இல்லை !
  • இதற்கு மேல் இன்னொரு உலகம் இல்லை !
  • என்று மறு உலக வாழ்க்கையை நம்பி வாழ்ந்த மக்களிடம் திணித்தார்கள்.

அத்துடன் அவர்கள் உருவாக்கிய (வட்டியை உள்ளடக்கிய) (ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதுப் போன்ற) பொருளாதாரத் திட்டத்தால் தான் பொருளாதாரம் குவிந்து செல்வம் செழிப்பானது என்று பீற்றிக் கொண்டார்கள்.

இன்று எங்கிருந்து இந்த பொருளாதார வீழ்ச்சி வந்தது. ?
இதற்கு எது காரணமாக அமைந்தது ?

என்றுப் புரியாமல் கைகளைப் பிசைந்த வண்ணம்  நிற்கின்றனர் .

எங்கிருந்து பொருளாதார சரிவு வருகிறது ?
ஏன் வருகிறது ?

என்பதை உலக பொதுமறை திருமறை கீழ்கானுமாறு  இயம்புகிறது .

32. இரண்டு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகக் கூறுவீராக! அவர்களில் ஒருவருக்கு இரண்டு திராட்சைத் தோட்டங்களை ஏற்படுத்தினோம். அவ்விரண்டுக்கும் பேரீச்சை மரங்களால் வேரி அமைத்து, அவ்விரண்டுக்கும் இடையே பயிர்களையும் ஏற்படுத்தினோம்.

33. அவ்விரு தோட்டங்களும் தனது பலன்களைச் சிறிதும் குறையின்றி அளித்து வந்தது. அவ்விரண்டுக்கும் இடையே ஆற்றை ஓடச் செய்தோம்.

34. மற்ற கனிகளும் இருந்தன. அவன் தனது தோழரிடம் உரையாடும் போது ''நான் உன்னை விட அதிகச் செல்வம் படைத்தவன்; ஆள் பலம் மிக்கவன்'' என்று கூறினான்.

35. தனக்குத் தானே தீங்கு இழைத்தவனாக தனது தோட்டத்துக்குள் நுழைந்தான். ''இது அழிந்து விடும் என்று நான் ஒரு போதும் நினைக்கவில்லை'' என்றான்.

36. அந்த நேரம்1 வரும் எனவும் நான் நினைக்கவில்லை. நான் எனது இறைவனிடம் கொண்டு செல்லப்பட்டால் இதை விடச் சிறந்த தங்குமிடத்தையே பெறுவேன் (என்றான்).

37. அவனுடன் உரையாடிய அவனது தோழர் ''மண்ணாலும், பின்னர் விந்தாலும் உன்னைப் படைத்துப் பின்னர் மனிதனாக உன்னைச் சீரமைத்தவனை நீ மறுக்கிறாயா?'' என்று கேட்டார்.

38. எனினும் அவனே அல்லாஹ். எனது அதிபதி. என் இறைவனுக்கு எவரையும் இணை கற்பிக்க மாட்டேன்.

39. உனது தோட்டத்துக்குள் நுழைந்த போது ''அல்லாஹ் நாடியதே நடக்கும். அல்லாஹ்வால் தவிர எந்த ஆற்றலும் இல்லை'' என்று நீ கூறியிருக்கக் கூடாதா? ''உன்னை விட செல்வத்திலும், சந்ததியிலும் நான் குறைந்தவன்'' என்று நீ கருதினாய்.

40. உனது தோட்டத்தை விட சிறந்த தோட்டத்தை என் இறைவன் எனக்கு வழங்கி, உன் தோட்டத்தின் மீது கணக்குத் தீர்க்கக் கூடியதை வானிரிருந்து அனுப்பி அதை வழுக்கக் கூடிய களிமண்ணாக ஆக்கி விடக்கூடும்.

41. அல்லது அதன் தண்ணீர் வற்றி விடும். அதைத் தேடிப் பிடிக்க உன்னால் இயலாது (என்றும் கூறினார்).

42. அவனது கனிகள் சுற்றி வளைக்கப்பட்டன. அது தலைகுப்புற விழுந்து கிடக்கும் நிலையில் அதற்காகச் செலவிட்டது பற்றி கைகளைப் பிசைந்தான். ''நான் என் இறைவனுக்கு ஒருவரையும் இணை கற்பிக்காமல் இருந்திருக்கக் கூடாதா?'' என்று கூறினான். 18:32 லிருந்து 18:42 வரையிலான வசனங்கள்.

மேற்கானும் திருமறை வசனத்தில் இரண்டு மனிதர்களில் இறைவனால் நிலபுலண்களும் அதன் மூலம் வசதியும் ஏற்படுத்தி கொடுக்கபட்ட ஒருவரும், அவை கொடுக்கப்படாத ஏழை ஒருவரும் உரையாடிய சம்பவத்தை இறைவன் எடுத்துக் கூறினான்.

இந்த செல்வம் இறைவனால் கிடைக்கப் பெற்றது என்ற நம்பிக்கையை விட்டு தனது முயற்சியால் பெறப்பட்டது என்ற கர்வத்தினால் வசதி இல்லாத ஏழையிடம்  பெருமை அடித்தார்.

இறைவன் அவருக்கு வழங்கிய செல்வத்தில் (தோட்டத்தில்) ஒரு நாள் மரங்கள் சரிந்து தலைகீழாக கிடப்பதைக் கண்டப் பின் இறைவனுக்கு இணைகற்பிக்காமல், இறைவனை நிணைவு கூர்ந்து, அவனைப் போற்றிப் புகழ்ந்து வாழ்ந்திருக்கக் கூடாதா ? என்று தனது கைகளைப் பிசைந்து கொண்டதாக இறைவன் கூறுகிறான்.

மேற்கானும் சம்பவம் நடக்கவிருப்பதற்கு சற்று முன்னர் இறைவனுடைய பேராற்றலை அந்த ஏழை அவருக்கு எடுத்துரைத்தக் காரணத்தால் அதற்குப் பின்னர் நடந்த இழப்பால் இது இறைவனுடைய கோபம் என்றுப் புரிந்து கொண்டார்.

இன்று மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை கண்டிருக்கக் கூடிய நாடுகளுடைய நிலையும் ஏறத்தாழ இறைவனை மறுத்து வாழ்ந்த தோட்டக்காரருடைய வாழ்க்கைக்கு ஒப்பானதாக அமைந்திருப்பதை அறியலாம்.

இப்பொழுதும் அவர்கள் தங்களுடைய தவறை உணர்ந்து இறைவனுக்கு இணைகற்ப்பிக்காத தூய வாழ்வுக்குத் திரும்பி அண்டை நாடுகளை அச்சுறுத்துவதிலிருந்து விலகிக் கொண்டால் இறைவன் அவர்களுடைய பாவங்களை மன்னித்து செல்வத்தை அதிகரிக்கச் செய்வான்.

இல்லை என்றால் நபிமார்களுடைய காலத்தில் இறைமறுப்பாளர்கள் மீது பேரழிவை ஏற்படுத்துவதற்கு முன் ஒருப் பஞ்சத்தை ஏற்படுத்தி சோதனை செய்ததுப் போன்று இதுவும் அமைவதற்கு அதிகப்படியான ஆதாரங்கள் திருமறைக் குர்ஆனில் காணப்படுகின்றன. 
 
7:130. ''படிப்பினை பெறுவதற்காகப் பல வகைப் பஞ்சங்களாலும் பலன்களைக் குறைப்பதன் மூலமும் ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தைத் தண்டித்தோம்''

திருந்துவார்களா ? மேற்கத்தியர்கள் அவர்கள் திருந்துவதற்காக நாமும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.

தவ்ஸ் குலத்தைச் சேர்ந்த  துஃபைல் இப்னு அம்ர்(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து

'அல்லாஹ்வின் தூதர் அவர்களே !

தவ்ஸ் குலத்தார் (இறைவனுக்கு) மாறு செய்து (இஸ்லாத்தை ஏற்க) மறுத்துவிட்டனர். அவர்களுக்கெதிராகத் தாங்கள் பிரார்த்தியுங்கள்'' என்று கேட்டுக் கொண்டார்கள்.

அவ்வாறே அவர்களுக்கெதிராக நபி(ஸல்) அவர்கள் பிரார்த்திப்பார்கள் என்று மக்களும் எண்ணினர்.  ஆனால் நபி(ஸல்) அவர்கள்

'இறைவா! தவ்ஸ் குலத்தாரை நேர்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (எம்மிடம்) கொண்டுவந்துவிடுவாயாக'' என்று (நல்வழி வேண்டிப்) பிரார்த்தித்தார்கள். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) அவர்கள். ஆதார நூல்: புகாரி 6397.
 


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104
அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்